வேம்பங்குடி குகன்

My photo
Pls comments or suggestions about this Blog. pilotguhan@gmail.com

Monday, February 1, 2010

குரங்கிலிருந்து பிறந்தவன்


  • ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்கு நான் அறிஞன் இல்லை. தத்துவ விசாரணை செய்யும் அளவுக்கு சிந்தனாவாதியும் இல்லை. கண்டது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சிந்தித்தது எல்லாவற்றின் கலவைதான் இந்தக் கட்டுரை.
குரங்கிலிருந்து பிறந்தவன்.

காலம்: சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னால்
இடம்: தமிழ்நாடு தேனி மாவட்டம் மலைப்பகுதி, ஆஸ்திரேலியக் கடற்கரை, மத்திய ஆப்பிரிக்கக் காடு, வட அமெரிக்கப் புல்வெளி, டைகரிஸ் நதி ஓரம் – எல்லா இடங்களிலும் பல முறை நடந்தது இது

கதாநாயகன் வேட்டை முடிந்து குகைக்குத் திரும்பும் போது மாலை வெளிச்சம் மங்க ஆரம்பித்து விட்டது. மூட்டி வைத்த தீயின் முன் அமர்ந்திருந்த சக மனிதர்கள் மான்களையும், மாடுகளையும், குதிரைகளையும், தோலுரித்துத் தீயிலிட்டுக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சிறு குரங்குகளைத் துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வயது வந்த பெண்களும் ஆண்களும் அவர்கள் மார்புகளும் ஆண்குறிகளும் எல்லோர் முன்னாலும் காற்றில் ஆடிக்கொண்டு இருக்க அதற்காக வெட்கப் பட்டு மூடாமல் அருகருகே அமர்ந்திருந்தனர். சாப்பிட்ட பிறகு கலவி செய்வது மட்டும் தானே வேலையே! மூடி வைத்தால் யாருக்கு என்ன இருக்கென்று எப்படித் தெரியும்?

ஆனால் உண்பது, உடலுறவு கொள்வது என்ற அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறும் முன்னதாக அவர்களுக்கு வேண்டிய இன்னோரு சிறு தேவை, நடுநாயமாக உட்கார்ந்திருந்த அந்தப் பெருங்கிழவன் சொல்லும் கதை. இன்றும் எல்லோரும் அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள கிழவன் தன்னிடமிருந்த காட்டுப் புல்லாங்குழலை இடையிடையே ஊதியபடியே பேச ஆரம்பித்தான்.

காலம் காலமாகக்கேட்டு வரும் பழங் கதைதான். ஆனாலும் தீயில் வேகும் விலங்குகள் தயாராகும் வரை, கிழவன் தாடியைத் தடவியபடி வானில் ஒலித்த பேரிடி, மலையை மூழ்கடித்த பெரு வெள்ளம், பத்து தலை கொண்ட நாகப் பாம்பு, அதை வீழ்த்திய மாவீரன் – என்று சொல்லிக் கொண்டே போக கூட்டம் முதல் முறை கேட்பது போல் திறந்த வாய் மூடாமல் கேட்டது.

கிழவன் சமர்த்தன். மழை வந்தால் அதற்கேற்றாற் போல் ஒரு கதை. அடுத்த ஊரிலிருப்பவர்கள் சண்டையிட வந்தால் வேறு கதை. குழந்தை இறந்தால் ஒரு கதை. பிள்ளை உருவாக்க முடியாதவனுக்கு விறைப்பு வர ஒரு கதை. சிரிக்கவும் அழவும் வேறு வேறு கதைகள். எல்லாமே அவனுக்கு அத்துப் படி. இந்தக் கதை சொல்வதற்குப் பரிசாக, வயதான காரணத்தால் வேட்டையாட முடியாத அவன் தின்ன சம பங்கு மான் கறியும், தினசரி அவன் புணர ஒரு பெண்ணும் தருவது ஊர் வழக்கம். அவனது எண்ணற்ற பிள்ளைகளில் ஒருவன் கிழவன் இறந்த பின் கதை சொல்ல இப்போதே தயாராகி வருகிறான்.

வேட்டையை முடித்து வந்த கதாநாயகனுக்குக் கதையில் மனம் ஈடுபடவில்லை. தனக்கு 20 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொடுத்துள்ள ஏழெட்டு பெண்மணிகளிடமோ அல்லது வேறு ஒரு பெண்ணிடமோ செல்லவும் மனம் நாடவில்லை. பசியும் எடுக்கவில்லை. காரணம் அவன் மனதை அரிக்கும் ஒரு கேள்விதான். அதை எல்லாம் தெரிந்த அந்தக் கிழவனிடமே கேட்பது என்று முடிவு செய்தான். தன் தோளில் இருந்த மானின் உடலை இறக்கி வைத்து விட்டு சத்தமாகக் கேட்டான்.

“கிழவா! எனக்கு ஒண்ணு தெரியணுமே..”

“இதென்னடாது வம்பாப் போச்சு! 20 பிள்ள பெத்தும் ஒனக்கு சந்தேகம் தீரலியா?”

கூட்டம் சிரித்தது. ஆனால் அவன் அதில் கவனம் சிதறாமல் கேள்வியைக் கேட்டான்.

“ஏன் வெளிச்சமா இருக்கு, அப்புறம் இருட்டு வருது, திரும்பவும் வெளிச்சம் வருது?”

கிழவன் இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை. கூட்டமும் எதிர் பார்க்கவில்லையென்பது அவர்கள் சிரிப்பை நிறுத்தியதில் புரிந்தது. கூட்டம் கிழவன் பக்கம் பார்வையைத் திருப்பியதில் அவனுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதும் புரிந்தது.

“என்ன கேக்குற?”

“தூங்கி எந்திரிக்கும் போது வெளிச்சமா இருக்கு, அப்பறமா திரும்ப இருட்டுது, திரும்பத் தூங்கி எந்திரிச்சதும் வெளிச்சமா இருக்கே. அது ஏன்?”

கிழவன் தன் வாழ்நாளில் “தெரியாது” என்று சொன்னதே கிடையாது. அப்படிச் சொல்லி விட்டால் தனக்கென்று இருக்கும் சிறப்பான இடம் போய்விடும் என்று அவனுக்குத் தெரியும்.

“அடப் போடா… இதெல்லாம் ஒரு கேள்வியா…. சூரியன் தொடர்ந்து இருந்துக் கிட்டே இருந்தா நாமெல்லாம் எப்பத் தூங்குறது? அதான் சாமி நம்ம மேல ஒரு பெரிய போர்வையப் போட்டு போர்த்தி விடுறாரு. இருட்டு வருது. நீ வேணுங்கிற அளவு தூங்கினதும் போர்வைய எடுத்திடறாரு. வெளிச்சம் வந்திடுது”

“ஆனா இருட்டின பெறகு மேல பாத்தா ஏதோ சின்ன சின்ன புள்ளியா நெறய வருதே! அப்பறம் பெரிசா வட்டமா ஒண்ணும் வருதே!”

“அதெல்லாம் போர்வைல இருக்குற ஓட்டைடா. இது கூடப் புரியலயா?”

கூட்டம் சள சளவென்று ஆமோதிக்க கதாநாயகனுக்கு மீண்டும் ஒரு முறை பேச வாய்ப்பே கிடைக்கவில்லை.

மெல்ல கூட்டத்திலிருந்து விலகி நடந்தான். மூட்டிய தீயின் வெளிச்சம் தீர்ந்து, காட்டின் இருள் துவங்கும் ஓரத்திற்கு வந்து தரையில் படுத்தான். வானத்தைப் பார்த்தான். தூரத்தில் கிழவன் சொல்லிக் கொண்டிருந்த கதைக்கும் அவன் கண்ணில் படும் காட்சிகளுக்கும் தொடர்பு இல்லையென்பது மெல்லத் தெரிந்தது.

இயல்பாகவே அவனுக்குள் கேள்விகள் தோன்றுவது உண்டு.

சில சமயம் ஏன் மேலிருந்து தண்ணீர் கொட்டுகிறது?
ஏன் ஆறுகள் திடீரென பொங்குகின்றன?
தூரத்து மலையிலிருந்து ஏன் நெருப்புக் குழம்பாக வடிகிறது?
தலை முடி ஏன் வெளுக்கிறது? தோல் ஏன் சுருங்குகிறது?
உடனிருப்பவர்கள் ஏன் திடீரென கண்மூடிப் படுக்கிறார்கள்? அதன் பின் எழவே மாட்டேனென்கிறார்கள்?

சாவு என்றால் என்ன? செத்த பிறகு அவர்கள் போகும் அதே இடத்திற்குத்தானா நான் கொல்லும் மானும் மாடும் போகின்றன?

கதாநாயகனுக்கு தலை வலித்தது.

அதையெல்லாம் விடு. இன்றைய கேள்வியை மட்டும் யோசி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

மேலே தெரியும் இருட்டு கருப்புப் போர்வையா? இவ்வளவு பெரிய போர்வை எங்கிருந்து வருகிறது? போர்வைக்கு வெளியில் என்ன இருக்கிறது?

சாமி என்பவர்தான் போர்த்தி விடுகிறாரா? சாமி என்பவர் யார்? அவருக்கு ஏன் இப்படி ஒரு வேண்டாத வேலை?

இந்த ஊரையும் மக்களையும் உருவாக்கி அவர் என்ன சாதிக்கிறார்?அவரது ஊர் என்ன? அவரை உருவாக்கியது இன்னும் ஒரு சாமியா? அந்த சாமி ஏன் இந்த சாமியைப் படைத்தார்?

இப்படிப் போயிக் கொண்டே இருந்தால் எதுதான் ஆரம்பப் புள்ளி? அந்த ஆரம்பப் புள்ளி ஏன் தோன்றியது?

இதை எல்லாம் கிழவனிடம் கேட்டுப் பயனில்லை.

கடவுள் என்பவரைப் பற்றி எதுவும் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்பவர்கள் கெட்டவர்கள் என்று கிழவன் சொல்லியிருக்கிறான். நல்லவனாக வாழ்ந்து கடவுளை வணங்குபவனுக்குதான் நல்ல மான் கறியும், தினசரி புணரப் புதுப் புதுப் பெண்களும் கிடைக்கும் – கிழவனுக்குக் கிடைப்பது போல. கடவுளை மதிக்காத கெட்டவர்களை புலி தின்னும். புதை குழி விழுங்கும். செத்தபின் கூட அவர்களுக்கு தண்டனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மீண்டும் கேள்விகள்.

கெட்டவன் நடந்து கொள்வது தவறென்றால் அவன் ஏன் கடவுளால் படைக்கப் படுகிறான்?
கெட்டதே நடக்காமல் கடவுளால் தடுக்க முடியாதா?
முடியாதென்றால் அவர் எல்லாம் வல்லவர் இல்லையே!

கெட்டதைத் தடுக்க முடிந்தும் தடுக்காமல் இருக்கிறாரா?
அப்போது அவரும் கெட்டவர் ஆகி விடுகிறாரே!

அவரால் தடுக்க முடியும், தடுக்க விருப்பமும் உள்ளது என்றால் ஏன் கெட்டது நடக்கிறது?
அல்லது கெட்டதை அவரால் தடுக்கவும் முடியாது, அவருக்கு அதைத் தடுக்கும் விருப்பமும் இல்லை என்றால் அவர் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?

கதாநாயகனுக்கு தலைவலி அதிகமாகி விட்டது.

கதாநாயகனுக்குத் தெரியாத இன்னும் ஒரு உண்மை. இதே கேள்விகள் இந்தப் பூமிப் பந்தில் பல இடங்களில் பல நாயகர்களுக்கு எழுந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கிழவனும் இருந்தான்.

பெயரற்ற,-முகமற்ற-இன்னுமொரு-மனிதப்-பிணம்

குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 2

கதாநாயகனின் பிணம் தெருவோரமாகக் கிடந்தது. திறந்த வாயை மொய்த்த ஈக்கள் அவன் காய்ந்த எச்சிலில் கலந்திருந்த விஷத்தை விழுங்கியதால் அவன் பிணத்திலிருந்து பத்தடிக்கு உள்ளாகவே ஆங்காங்கு சுருண்டு விழுந்தன.

இறந்தவனைப் பற்றிக் கவலையே பட வேண்டாம்; அவன் நம் கதாநாயகனாக இருந்தாலும். இங்கு போயிருப்பது ஒரு மனித உயிர் அவ்வளவுதான். இதற்கு வருந்த வேண்டிய அவசியமே இல்லை.

உங்களுக்கு நான் குரூர மனதுக்காரன் என்று தோன்றினால் ஒரு நிமிடம் எழுந்திருங்கள். முகம் பார்க்கும் கண்ணாடி முன் நில்லுங்கள். உங்கள் அழகை ரசித்து கவனம் சிதற விடாதீர்கள். முதலில் நேராக நின்று இரு கைகளையும் விரித்து நீட்டிக் கொள்ளுங்கள்.

செய்து விட்டீர்களா? இப்போது உங்கள் வலது கை நடு விரல் நுனியிலிருந்து பார்வையை ஓட்ட ஆரம்பியுங்கள்.

அந்த விரல் நுனிதான் இந்த பூமிப் பந்து உருவான காலம் என வைத்துக் கொள்வோம். மெதுவாக நிகழ்ந்த கோடானு கோடிக்கால ஆண்டு காலமாற்றத்தில் வலது கைமணிக்கட்டை நீங்கள் அடையும் வரை பூமியில் அமில மழைதான் பெய்தது. பார்வையைத் தொடர்ந்து ஓட்டுங்கள்.

மெதுவாக. அமிலமழை நின்று அதன் பின் பூமி குளிர்வதற்கு உங்கள் முழங்கை ஆகிவிட்டது. வெறும் குழம்பாக இருந்த பூமிப் பரப்பில் அமினோ அமிலங்கள் ஒன்றோடு ஒன்று இணையத் தொடங்கின. அந்த அமிலங்கள் இணைந்து ஓரணு உயிர்கள் உருவாகி அவை பலப் பல கோடி ஆண்டுகளாக தன்னைதானே பிரதி எடுத்துக் கொண்டு பெருகுவதற்குள் உங்கள் தோள்பட்டை வந்துவிடுகிறது. இவை மேலும் மேலும் வளர்ந்து, ஆண் - பெண்ணென இருவகையாகப் பிரிந்து, பிரதி எடுப்பதற்குப் பதிலாக சிறு அளவில் அதே உருவத்தை இனப் பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும் போது நெஞ்சுக்கூட்டின் மேல் உங்கள் பார்வை வந்திருக்க வேண்டும். இன்னும் தாண்டி உங்கள் நடு நெஞ்சில் வந்தி நிற்கும்போதுதான் பூமியில் சிறு சிறு தாவர வகைகள் உருவாகின.

இடப்புற விலா எலும்பை அடையும் போது தண்ணீர் வாழ் உயிரினங்கள் கிட்டத்தட்ட இந்தக் கால மீன்களுடன் ஒப்பிடும் வகையில் தோன்ற ஆரம்பித்து விட்டன. கண்கள், வாய், உணவுக் குழல், மலத் துவாரம், இனப் பெருக்க உறுப்பு, ரத்த ஓட்டம், அதை இயக்கும் இதயம், ரத்த நரம்புகள் என்று நமக்குப் பழக்கமான உயிர் அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்தன. பட்டாணியில் பத்தில் ஒரு பங்கு அளவில் மூளையும் தோன்ற ஆரம்பித்தது.

இடது தோள்பட்டையை நீங்கள் அடையும் காலத்தில் பூமியில் டைனோசார்கள் புரண்டு கொண்டிருந்தன. உடல் அளவில் பல ஆயிரம் மடங்கு வளர்ந்த இந்த உயிர்களுக்கு மூளை மட்டும் அந்த அளவு அதிகரிக்கவில்லை. அதே உணவு, உறக்கம், இனப்பெருக்கம் என்ற உயிர் வாழும் கவலைகள் மட்டும்தான் இருந்தன. இந்த ராட்சத உயிரினம், பல்வேறு உயிர் வகைகளாக மாறி நிமிர்ந்து, நடந்து, ஓடி, பறந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டபோது கால ஓட்டத்தில் உங்கள் இடது முழங்கை வந்து விட்டது.

ஆறரை கோடி வருடங்கள் முன்பு, நன்றாக நிறுத்தி நிதானமாக, ஒரு பூச்சியத்தையும் விடாமல் எழுதி விடுகிறேன் – 6,50,00,000 வருடங்கள் முன்புபூமியின் மீது திசை மாறி வந்த ஒரு விண்கல் மோதியபோது உலகையே ஆட்டிப் படைத்த டைனோசார் வம்சமே பூண்டோடு கருகிப் போனது. பல லட்சம் ஹிரொஷிமா குண்டுகளுக்கு இணையான அந்த வெப்ப விபத்திலும் தப்பித்த ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிதான். மீண்டும் ஒரு முறை பூமி முழுவதும் குளிர்ந்து, பனியால் மூடி, பனி உருகி வேறு உயிரினங்கள் உருவான போது இடது மணிக்கட்டை வந்து அடைந்து விட்டோம்.

இப்போது புதிதாகத் தோன்றிய உயிரினங்களில் சில முட்டை போடாமல் நேரடியாகக் குட்டி போட்டன, முலைப் பால் கொடுத்தன. இந்த நாலுகால் விலங்குகள் மரத்திலிருந்து இறங்கி வந்து இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்த போது உங்கள் இடது கை நடுவிரலின் தொடக்கத்தில் வந்து நிற்கிறோம். முக்கியமான நிகழ்வு. தலையில் இருக்கும் மூளை என்ற சதைத் தொகுப்பு அளவில் பெருக்க ஆரம்பித்து விட்டது. நினைவுகள் பதிந்து கொள்ளும் வண்ணம் அதன் உட்புற ரகசியங்கள் பரிணாம வளர்ச்சி அடைய ஆரம்பித்தன. இப்போது குரங்குகள் மரத்திலிருந்து கீழிறங்கி நடக்க நடக்க முன்கால்கள் வலுக்குன்றி நீளம் குறையத் தொடங்கின. முதுகெலும்பு நிமிர ஆரம்பித்தது. ஆண்குறி நீளம் குறையத் தொடங்கியது. குரங்குகளின் குரோமோசோம்களின் எண்ணிக்கை சிறுகச்சிறுக மாறி மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட ஆனால் முழு மனிதனல்லாத ஒரு உயிரினம் உருவானது.

இப்போது உங்கள் நடுவிரலில் சதை முடிந்து நகத்தின் அடிப்பாகத்தில் இருக்கிறோம். இந்த உயிரினம் தனித்தனியாக வாழ்ந்தது. தனித்தனியாக வேட்டையாடியது. தற்கால மனிதர்களுக்கும் இந்த உயிரினங்களுக்கும் வெளிப்புறத்தில் எந்த வேறுபாடும் இல்லை. இந்த உயிரினம் மேலும் மேலும் பரிணாம வளர்ச்சி அடைய அடையத்தான் மனிதர்கள் தோன்றத்தொடங்கினர். ஆனால் இவர்களுக்குள் மூளை அளவும் குரோமோசோம் எண்ணிக்கையும் மாறுபட்டன. அதோடு மனிதர்களால் இந்த உயிரினத்துடன் உடலுறவு கொள்ள முடியும். ஆனால் அதனால் இனப்பெருக்கம் நடக்காது.

மனிதர்களும் அவர்களுக்கு முந்தைய உயிர்களும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் காலத்தில், நாம் உங்கள் இடக்கை நடுவிரல் நகத்தில் பாதியைத் தாண்டி விட்டோம். இப்போது உருவாகியிருக்கும் மனிதர்களின் மூளைகள் இன்னும் வளர்ந்திருந்தன. அவர்களால் சிந்திக்க முடிந்தது. நினைவுகளைப் பதிந்து வைத்துக் கொள்ள முடிந்தது. தனக்கு முந்திய உயிரினம் தன்னைப் போல புத்தி சாலியாக இல்லையென்பதை அவர்களால் உணர முடிந்தது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு உண்மை அவர்களுக்குப் புரிந்தது.

அது தனக்கு முந்தைய அந்த உயிரினத்தின் இறைச்சி தின்பதற்கு சுவையாக இருந்தது என்பதே.

10 லட்சம் ஆண்டுகள் மனிதனும் அந்த ஜீவராசியும் பூமியில் பல மூலைகளில் சேர்ந்தே வாழ்ந்தனர். அந்தப் 10 லட்சம் ஆண்டுகளும் அந்த உயிரினம் மனிதர்களால் கூட்டம் கூட்டமாக வேட்டையாடப் பட்டது. கொன்று தின்னப் பட்டது. முழுமையாக அந்த இனம் அழிந்து மனிதன் மட்டுமே பூமியில் கோலொச்ச ஆரம்பித்த போது நக நுனியில் இருக்கிறோம்.

நண்பரே! ஒரு சிறு ரம்பம் கொண்டு உங்கள் இடது கை நடுவிரல் நக ஓரத்தை லேசாக இராவி விட்டால் போதும். பூமியில் மனிதனுக்கு தனி வரலாறு கிடையாது. கொஞ்சம் அழுத்தி நகத்தை வெட்டி விட்டால் போதும். மனிதனே கிடையாது.

இந்த ஒட்டிக் கொண்டிருக்கும் ஓர உயிரில்தான் நம் பரம்பரைப் பெருமை, பாட்டன், முப்பாட்டன், காந்தி, திப்பு சுல்தான், ஷேக்ஸ்பியர், முகம்மது, ஏசு, அலெக்ஸாண்டர், வள்ளுவர், அசோகர், சிந்து வெளி நாகரிகம், சக்கரம் கண்டு பிடித்தவன், நெருப்புக் கண்டு பிடித்தவன் எல்லோருமே ஊசலாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு வெட்டு. எல்லோரும் காணாமல் போக வேண்டியதுதான். அதன் பின் மிஞ்சி இருப்பது பல நூறு கோடி ஆண்டுகளாக நிலவி வரும் அமைதி மட்டுமே.

நாடு கிடையாது. மொழி கிடையாது. இனம் கிடையாது. மதம் கிடையாது. கடவுள் கிடையாது.

இந்த நிராகரிக்கக் கூடிய அளவிலான புத்தம் புதிய இனம் முழுமையாக இல்லாமலே போனாலும் உலகம் சுழன்று கொண்டுதான் இருக்கும். இனமே இல்லாதபோது அந்த இனத்தின் வழியே வந்த ஒரு உயிர், ஒரே ஒரு உயிர், போனால் என்ன குறைந்து விடும்? கதாநாயகனாக இருந்தாலும் பரவாயில்லை. சாகட்டும் விடுங்கள்.

அவனுக்காக அழ வேண்டாம். ஆனால் அவன் மரணத்தின் காரணம் மட்டும் தெரிந்து கொள்வோம்.

பல ஆயிரம் வருடம் முன்னால் ஒரு கதாநாயகன் ஒரு கிழவனிடம் கேட்ட கேள்விகள் காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி அடந்து இந்தக் கதாநாயகன் இந்தக் காலக் கிழவனிடம் கேட்கும் போது உரு மாறி விட்டன.

ஒரு கதாநாயகன், சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டவன் எப்படி உயிருடன் திரும்ப முடியும்? நம்ப முடியவில்லயே! என்றான். தாடி வளர்த்த கிழவர்களின் கூட்டம் அவனுக்கு இறந்தவன் காட்சி அளித்ததாகக் கதை சொல்லி ஊர் வாயை அடைத்தது.

வேறொருவன், மனிதனுக்காகத்தான் இந்த உலகமும், சூரியனும் வானமும் என்கிறீர்களே? ஆனால் நான் பரிசோதனை செய்து பார்க்கும் போது பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது. பூமிக்கு விண்வெளியில் அவ்வளவு முக்கியமில்லையே! என்றான். கிழவர்கள் கூட்டம் அவனுக்கு சிரச்சேதம் செய்தது.

கடவுள் மனிதனைப் படைத்தார் என்றால், மனிதனை உருவாக்க ஏன் இத்தனை காலம் ஆயிற்று? தன்னை உணரும் ஜீவராசி வந்தால்தானே தான் இந்த உலகின் அதிபதி எனும் எண்ணமே தோன்றும்? 99.99% உலக வரலாற்றில் அப்படி ஒரு பேச்சுக்கே இடமில்லையே, ஏன்?” இந்தக் கேள்விகளைக் கேட்டவன் தலையை யானை இடறியது.

ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் மட்டுமே முதலில் கடவுள் படைத்தாரென்றால், அவர்களுக்குக் குழந்தை பிறந்திருப்பது எப்படி என்று புரிகிறது. மூன்றாம் தலைமுறை எங்கிருந்து வந்தது? தாயும் மகனும், தந்தையும் மகளும், சகோதரனும் சகோதரியும் புணர்ந்துதான் நம் வம்சாவளி உருவானதா?” இந்தக் கேள்வி கேட்ட நாக்கு வெட்டப் பட்டது.

தெருவோரம் இறந்து கிடக்கும் கதாநாயகன் கேட்ட கேள்வி உங்களுக்குத் தெரிய வேண்டாமா? இதோ அவன் குரலிலேயே கேளுங்கள்.ஏய், கிழவா! சிலுவையில் அறைந்ததால் செத்த கிழவன் சொன்னது எல்லாம் சரி என்றும் அவனும் நீயும் ஒரே தகப்பனுக்கு 650 வருட இடைவெளியில் பிறந்த சகோதரர்கள் என்றுதானே இத்தனை நாள் சொன்னாய்? இப்போது திடீரென்று உன்பேச்சையெல்லாம் அவன் கூட்டம் ஏற்காத ஒரே காரணத்தால் உனக்கும் கடவுள் மலை உச்சியில் வைத்து தனியாக அறிவுரை சொன்னதாக புதுக்கதை விடுவது சரியில்லை. நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்”. என்றான். அவ்வளவுதான். கைகள் பின்புறம் கட்டப் பட்டன. தலைமுடி பிடித்து இழுக்கப்பட்டு, வலியில் திறந்த வாயில் விஷம் ஊற்றப் பட்டது. இப்போது அவன் பிணம் ஈ மொய்த்துக் கிடக்கிறது.

இதில் கோபப் பட ஒன்றுமில்லை. தன் வசதிக்கேற்ப விதிகளை மாற்றுவது கிழவர்களின் வழக்கம்.

தன் தாயார் எவனாலோ புணரப் பட்டு தன்னை உருவாக்கினால், தான் கடவுளின் குழந்தை என்றும், தன் தாய் கன்னித்தாய் என்றும் சொல்லிக் கொள்ளலாம். தனக்கு காலமுக்கி விடுவது பெண்ணென்றால் ஊரெங்கும் எல்லா ஆண்களும் பெண்களை அப்படி நடத்தலாம். தான் கள்ளருந்தினால் மட்டுமே தன் வழித் தோன்றல்களும் அருந்தலாம். தனக்கு இன்னோரு ஆணுடன் புணரப் பிடித்தால் அப்போது தான் பெண் அவதாரம் எடுத்ததாகச் சொல்லிக் கொள்ளலாம். தனக்கு நான்கு மனைவியென்றால், ஊரிலும் நான்கு மனைவி வரை மணக்கலாம். ஐந்தாவது கூடாது. நானே செய்து கொள்ளவில்லை. உனக்கென்னடா? தன்னை எவன் எதிர்த்தாலும் அவனின் தலையெடுக்கலாம். நரகம் வருமென்று பயமுறுத்தலாம். தான் தெய்வீகமெனச் சொல்லிக் கொள்ளும் மடத்தினுள்ளே பெண்களுடன் காமதாகம் தணித்துக் கொள்வதைக் குறை சொல்லி பொதுமக்கள் படிக்க எவனாவது எழுதினால் அவன் வீடு புகுந்து வெட்டிக் கொல்லலாம்.

இது கிழவர்களின் உலகம். கதாநாயகர்களுக்குத் தொடர்ந்து தோல்விதான் மிஞ்சும்.

ஆனால்..

கண்ணோ, வயிரோ, குடலோ, மலத்துவாரமோ, ரத்த நாளமோ பல நூறு கோடி ஆண்டுகளாக வளர்ந்து வருகையில், இந்த மூளை மட்டும் சில கோடி ஆண்டுகளாகவே பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்னமும் மனிதன் தூக்கத்தில் கீழே விழுவது போல் கனவு காண்பது மரத்தில் குரங்காக வாழ்ந்த நினைவின் எச்சமே. தன்னை ஏறெடுத்துக் கூடப் பார்க்காத உலக அழகியைப் பற்றி நினைத்து ஆண்குறி விரைப்பது இனப்பெருக்க எண்ணமே தவிர தெளிவான மூளை ஒப்புதல் சொல்லும் நடைமுறையில் சாத்தியமான காமம் அல்ல. பக்கத்தில் இருப்பவன் தட்டைப் பார்த்து எச்சில் ஊறுவது போல. நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்று முட்டாள்தனமாக நம்புவது போல. இறந்தவர்களின் “ஆத்மா” என்ற கண்ணில் படாத ஒன்று “பேய்” என்ற அருவமாக சுற்றிவரும் என்று நம்புவது போல. மூளை முழுமையாக வளராததால் இருக்கும் நடைமுறைக் குறைகள் எண்ணற்றவை. அதில் ஒன்றுதான் கடவுள் நம்பிக்கையும்.

முதுகெலும்பு நிமிர்ந்தது போல, முன்கால்கள் குறுகியது போல, மூளையும் இன்னும் சில கோடி ஆண்டுகள் தொடர்ந்து வளர்வதே இயற்கை. காலம் போகப் போக, மூளை வளர வளர, சரியான கேள்விகள் தொடர்ந்து கேட்கப் பட, இந்த மூட எண்ணங்கள் மறையும். அதுவரை கதாநாயகர்களின் குரல் வளை நெரிக்கப் படட்டும். கிழவர்களின் களியாட்டம் தொடரட்டும்.

ஆனால் ஒவ்வொரு முறை கதாநாயகன் கொல்லப் படும்போதும் நாம் அழாவிட்டாலும் வேறு எங்கிருந்தோ ஒரு அழுகை சத்தம் வருவதை கவனித்தீர்களா?

அது அடுத்த கதாநாயகனின் பிறப்பின் அறிவிப்பு

No comments:

Post a Comment